பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, இன்று பிற்பகலில் அவரது உயிர் பிரிந்தது. திரையிசை உலகில் மிகச் சிறந்த பின்னணி பாடகராக இருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி: இந்திய இசை உலகத்திற்கு 20-ஆம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன். “ஆயிரம் நிலவே வா” என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆர். அவர்களின் இதயத்தில் இடம் பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியன். அன்னாரது குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் “தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக” என்ற மறைந்த ஜெயலலிதாவின் புகழ் பாடும் பாடல், திமுக வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்: எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசைத் தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடலைக் கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார் பாடலுக்கு என்றே பிறந்தவர் எஸ்பிபி என்று சொல்லுமளவிற்கு, 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, அதிக எண்ணிக்கையிலான பாடலை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர் ஆவார். மு.க. ஸ்டாலின்: எஸ்பிபி மறைவு, இசை உலகிற்கு பேரிழப்பாகும். நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், தங்களின் சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகிறோம். 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக்குரல் கொடுத்தும் பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் மற்றும் பல மாநில அரசுகள், திரைத்துறை விருதுகளால் பெருமை பெற்றவர். கருணாநிதியின் அன்பிற்குரியவர்.

Leave a Reply